நூல் வெளியீடு - வழிமுறைகள் |
அன்புடையீர்! உங்கள் தமிழ் படைப்புகளை நாங்கள் வெளியிட்டு உதவ தயாராயிருக்கிறோம். இதன்மூலம் எழுத்தாளரான உங்களுக்கு புத்தகம் வெளியிடுவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை நாங்கள் ஏற்றுக் கொண்டு உங்களுக்கு உதவ உள்ளோம். முதலில் உங்கள் நூலைப் பற்றிய சிறு குறிப்பை (ஒரு பக்கத்திற்கு மிகாமல்) மின்னஞ்சல் மூலமோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைக்கவும். அது எங்களுக்கு பிடித்திருந்தால் முழு நூலின் தெளிவான கையெழுத்துப் பிரதியையோ, அல்லது தட்டச்சு செய்த பிரதியின் நகலையோ அனுப்பி வைக்கவும். (இது தங்களுக்கு திருப்பி அனுப்பப் படாது. ஆகவே மூலப் பிரதியை அனுப்ப வேண்டாம். தங்களிடமே வைத்துக் கொள்ளவும்.) தங்கள் நூலின் அளவு டெம்மி நூல் அளவில் 96 பக்கங்களுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இந்த முழு நூலும் எமது குழுவினரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். எமது குழு தங்கள் நூலை வெளியிட ஒப்புதல் அளித்த பிறகு தங்களுக்கு கடிதம் / தொலைபேசி / மின்னஞ்சல் மூலம் உடனடியாக தெரியப்படுத்தப்படும். நூல் அச்சிடுவதற்கு தேர்வானதும், தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களைப் பற்றிய ஆசிரியர் குறிப்பு (பின் பக்க அட்டையில் வெளியிடுவதற்கு), ஆசிரியர் உரை அல்லது மற்றவர்களிடமிருந்து பெற்ற அணிந்துரை, வாழ்த்துரை ஆகியவற்றையும் அனுப்பவும். ஆசிரியர் உரை, அணிந்துரை, வாழ்த்துரை இவை அனைத்தும் சேர்த்து 3 பக்கங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும். நூலின் தலைப்பு வாசகர்களைக் கவரும் விதத்தில் இருத்தல் அவசியம் என்பதால் இதில் கூடுதல் கவனம் செலுத்தி குறைந்தது 3 தலைப்புக்களையாவது அனுப்பவும். நூலின் தலைப்பை மாற்றவும் பதிப்பகத்துக்கு உரிமை உண்டு. தங்களின் கையெழுத்துப் பிரதியை நாங்கள் கணினியில் கம்போஸ் செய்து ஆப்செட் முறையில் அச்சிடுகிறோம். நூலின் முதல் பதிப்பில் மொத்தம் 1200/600 படிகள் அச்சிடுவோம். அந்த மொத்த 1200/600 பிரதிகளில் 200/100 பிரதிகள், புத்தக மதிப்புரை, பரிசு போட்டிகளுக்கு அனுப்புதல், இலவச அன்பளிப்பு, நூல் குறைபாடுகள் போன்றவற்றிற்கு கழித்துக் கொள்ளப்படும். எனவே 1000/500 பிரதிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதன் அடிப்படையில், முதல் பதிப்பில் நூலாசிரியருக்கு 10 பிரதிகளும், பதிப்பிக்கப்பட்ட நூலின் விலையில் 10% தொகையும் ராயல்டியாக அளிக்கப்படும். இந்தத் தொகை 2 தவணையில் அளிக்கப்படும். உதாரணமாக ரூ.50 மதிப்புள்ள நூலுக்கு, அச்சடிக்கப்படும் 1200 மொத்த பிரதிகளில் 1000 நூல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு 1000xரூ.50=ரூ.50000. இந்த மொத்த தொகையில் 10%, அதாவது ரூ.50000x10/100=ரூ.5000/ (ரூபாய் ஐந்து ஆயிரம் மட்டும்) ராயல்டியாக வழங்கப்படும். ராயல்டி தொகை 2 தவணைகளில் (அதாவது 5% வீதம்) வழங்கப்படும். வெளியிடப்பட்ட நூலின் 50 சதவிகித நூல்கள் விற்பனையானதும் முதல் தவணை ராயல்டி தொகை (அதாவது 5%) அனுப்பி வைக்கப்பட்டும். இரண்டாவது தவணை ராயல்டி தொகை (அதாவது 5%) மீதமுள்ள முதல் பதிப்பு நூல்கள் அனைத்தும் விற்பனையானதும் அனுப்பி வைக்கப்படும். மேலே சொன்ன 10 நூல்களுக்கு மேல் ஆசிரியருக்கு தேவைப்பட்டால் நூலின் விலையில் 75% தொகையை செலுத்தி தேவையான நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம். புத்தக உரிமை முழுவதும் எங்களுடைய பதிப்பகத்துக்குத் தான் என்பதை உறுதிசெய்ய நூலின் 2ஆம் பக்கத்தில் இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். தங்கள் நூல் வெளியிட தேர்வு செய்யப்பட்டால், அதன் பிறகு ஏறக்குறைய மூன்று மாதத்தில் நூல் அச்சிட்டு வெளியிடப்படும். (சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் இந்த கால அவகாசம் அதிகமானாலும் ஆகலாம். நூலாசிரியர்கள் அதுவரை பொறுமை காக்க வேண்டுகிறோம்.) தமிழகத்தில் இருக்கும் நூலாசிரியர்களுக்கு நூல் வெளியிட்ட பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட உள்ள 10 நூல்களும் அவர்களுக்கு கொரியர்/அஞ்சல் மூலம் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். நூலாசிரியர்கள் வெளிநாடுகளில் இருந்தால் அவர்களுக்கான நூல்களை அஞ்சலில் அனுப்புவதற்கான செலவினை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் விரும்பினால் இந்தியாவில் உள்ள அவர்களின் உறவினர்கள்/நண்பர்களுக்கு அனுப்புதல் கட்டணமின்றி அனுப்பி வைக்கப்படும். நூல் வெளியீட்டு விழா நடத்துவது பதிப்பகத்தின் வசதியைப் பொறுத்தது. பதிப்பகம் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்ய இயலாத போது நூல் ஆசிரியர்கள் தத்தம் செலவில் வெளியீட்டு விழாவை நடத்திக் கொள்ள வேண்டுகிறோம். இரண்டாவது பதிப்பு முதல் அடுத்து வரும் அனைத்து பதிப்புகளுக்கும் மேலே சொல்லப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் பொருந்தும். ஆசிரியர் வேறு பதிப்பகம் மூலமோ அல்லது சொந்தமாகவோ வெளியிடுவதாக இருந்தால் எம்மைத் தொடர்பு கொண்டு பேசி, எமக்குச் சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையினை செலுத்திய பின் தங்களின் நூலின் உரிமையைப் பெற்றுக் கொள்ளலாம். பதிப்பக இழப்பீட்டுத் தொகை அச்சிடப்பட்ட நூல்கள், விற்பனையான நூல்கள், மீதம் உள்ள நூல்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இறுதி செய்யப்படும். இவ்விஷயத்தில் பதிப்பக உரிமையாளரின் தீர்ப்பே இறுதியானது. மேலே நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள "உரிமை: பதிப்பகத்தார்க்கே" என்பது நூலின் அனைத்து பதிப்பிற்கும் பொருந்தும். உங்களுக்கு நூல் வெளியீடு குறித்து மேலே சொல்லபட்ட அனைத்து நிபந்தனைகளும் உடன்பாடாக இருந்து, உங்கள் நூலை எங்கள் பதிப்பகம் மூலம் வெளியிட விரும்பினால், கீழ்க்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமோ எம்மைத் தொடர்பு கொள்ளவும். குறிப்பு: எமது குழுவினரால் முழு நூலும் படித்துப் பார்க்கப்பட்டு அச்சிட தேர்வானதாக தங்களுக்கு கடிதம் வரும் வரையில், நூல் வெளியிடுவதற்கான எந்த உத்திரவாதத்தையும் பதிப்பகம் அளிக்க இயலாது. தாங்கள் முதலில் அனுப்பும் ஒரு பக்க நூல் பற்றிய குறிப்பு எங்களுக்கு பிடித்திருந்தாலும், தாங்கள் பிறகு அனுப்பும் முழு நூலும் எமது குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே பதிப்பிக்க இயலும். தயவு செய்து முழு நூலையும் தாங்களாகவே எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டாம். மேலும் விபரங்களுக்கு கோ.சந்திரசேகரன் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ், தொலைபேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: dharanishpub@gmail.com |